டிரெண்டிங்

குளச்சல்: மீன்வரத்தும், விலையும் அதிகரிப்பு... மீனவர்கள் மகிழ்ச்சி

குளச்சல்: மீன்வரத்தும், விலையும் அதிகரிப்பு... மீனவர்கள் மகிழ்ச்சி

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வரத்து அதிகரித்து, ஏற்றுமதி ரக மீன்கள் விலையும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள், தற்போது முழுமையாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மீன்பிடிக்க ஏதுவான காலநிலை நிலவுவதால் மீனவர்கள் அதிக அளவில் கணவாய், அயலை, கொழிசாளை, சூரை, சுறா, திருக்கை போன்ற மீன்களுடன் கரை திரும்பினர்.


தற்போது இந்த மீன்களை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டியதாலும் ஏற்றுமதி நிறுவனங்களும் மீன்களை கொள்முதல் செய்வதால் மீன் விலை அதிகரித்து காணப்பட்டது. இன்றைய நிலவரப்படி 1-கிலோ கணவாய் மீன் 350 ரூபாய்க்கும், அயலை 1-கிலோ 120, கொழிசாளை 1-கிலோ 20, சூரை 1-கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையானது.


இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் கொண்டு வரப்பட்ட மீன்கள் முழுமையாக விற்பனைக்கு வந்த நிலையில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.