தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி விலகினார். அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் என பலரது பெயர்கள் வெளியானது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் பதவி வகித்த வந்த நிலையில் தற்போது மீண்டும் தலைவரை மாற்றி காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக ஹெச்.வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் காங்கிரஸ் செயல்தலைவர்களாக கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கே.எஸ்.அழகிரி மக்களவை தொகுதி எம்.பி ஆக இருந்தவர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் உட்கட்சி பூசல் இருந்து வருவதாகவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய தலைமை இருந்தால் தான் சரியாக இருக்குமென்றே காங்கிரஸ் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “என்னை தேர்வு செய்த ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு நன்றி. கட்சியில் இளைஞர்களை சேர்க்க செயல் தலைவர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பேன். பழைய அமைப்பின் மீது நம்பிக்கையில்லாததால் புதிய அமைப்பு கொண்டு வரப்படவில்லை. இது இயல்பான மாற்றம் தான். திருநாவுக்கரசருக்கான இடம் தமிழக காங்கிரசில் எப்போது இருக்கும்” என்றார்.