கேரள மாநிலம் திரிச்சூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருவாயூர் மாவட்டம் நென்மினி பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் ஆனந்த் (23). 2013-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச்(DYFI) சேர்ந்த ஃபாசில் கொலை வழக்கில் 2-வது குற்றவாளியான இவர், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஆனந்த் திருச்சூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று மதியம் படுகொலை செய்யப்பட்டார். தனது நண்பருடன் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் காரில் வந்த ஒரு கும்பல் அவரது வாகனத்தின் மீது மோதியது. இதையடுத்து கீழே தடுமாறி விழுந்த ஆனந்தை காரில் இருந்து இறங்கிய கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர்.
பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவினர் சில இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். கேரளாவில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கேரளாவில் பாஜக சார்பில் சமீபத்தில் மாபெரும் நடைபயணம் நடைபெற்றது. இந்த நிலையில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.