வெற்றிப் பெற வேண்டுமென்ற நெருக்கடியில் இன்று பெங்களூர் அணியுடனான போட்டியில் களம்காண்கிறது சென்னை அணி. இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியிருக்கும் சென்னை இதுவரை 2 போட்டியில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் புள்ளிகள் பட்டியலில் 6ஆம் இடத்தில் இருக்கிறது.
கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்தப் போட்டியில் எளிதாக வெற்றிப் பெறும் சூழ்நிலை இருந்தபோதும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தின் காரணமாக தோல்வி கண்டது சென்னை. அதுவும் கேதர் ஜாதவின் பேட்டிங் மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. நிச்சயமாக இன்றையப் போட்டியில் கேதர் ஜாதவுக்கு அணியில் வாய்ப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.
சென்னை அணியில் முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரராக சொதப்பியபோதும், ராயுடு காயத்தால் விளையாடாமல் இருந்தபோதும். இவர்களுக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில் இன்றையப் போட்டியில் கேதர் ஜாதவ் இடம் பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.
கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழக வீரர் என்.ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளில் ஏற்கெனவே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி லைம் லைட்டுக்கு வந்தார் ஜெகதீசன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநில ஆல் ரவுண்டர் மோனு குமாருக்கும் இன்றையப் போட்டியில் வாய்ப்பு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவர் மிதவேகப்பந்துவீச்சு மற்றும் வலது கை பேட்ஸ்மேன் ஆவார். 2014 U19 உலக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர். இவர்கள் இருவரும் இல்லை என்றால் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் சாண்ட்னருக்கும் வாய்ப்பு கொடுக்கலாம். இடது கை சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும், டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடக் கூடியவர் சாண்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.