டிரெண்டிங்

''வேலூர் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெறுக'' - தேர்தல் ஆணையத்துக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம்

''வேலூர் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெறுக'' - தேர்தல் ஆணையத்துக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம்

webteam

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி, அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. முன்னதாக, கடந்த மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிக‌ளி‌ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது கதிர் ஆனந்த் வீட்டில் முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  அதன் பிறகு  திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசனின் ‌சகோதரி வீட்டிலிருந்‌து 11 ‌கோடியே 48 ‌லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்‌ செய்யப்பட்டது‌. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தன. இதன்படி தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், தமது வீட்டில் சோதனை செய்து எடுக்கப்பட்ட பணத்துக்கு உரிய கணக்குகள் காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றிப பெற வைப்பதற்காக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும் வருமான வரித்துறை அளித்த தவறான அறிக்கையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்திருப்பது சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்துள்ள கதிர் ஆனந்த், திட்டமிட்டபடி வேலூரில் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.