டிரெண்டிங்

கருணாநிதி ஓய்வில் இருக்கிறார் நலமுடன் இருக்கிறார்: ஜெ.அன்பழகன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று இரவு சந்தித்து நலம் விசாரித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கருணாநிதி நலமோடு இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் திமுக தொண்டர்கள் கருணாநிதி இல்லம் இருக்கும் கோபாலபுரத்தில் குவியத் தொடங்கினர். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து பேட்டியளித்தார் அதில் "காவிரி மருத்துவமனை அறிக்கையால் சற்று பதற்றம் ஏற்பட்டுவிட்டது. கருணாநிதி நலமுடன் இருக்கிறார். நோய் தொற்றுகாரணமாக ஓய்வில் இருக்கிறார்" என தெரிவித்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை பதிவிட்டிருந்த ஜெ.அன்பழகன் " தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர்" என தெரிவித்திருந்தார்.