டிரெண்டிங்

IT வேலைக்கு முழுக்கு போட்டு கழுதை வளர்த்து கல்லா கட்டும் ஸ்ரீநிவாஸ் கவுடா.. யார் இவர்?

JananiGovindhan

பிடிக்காத வேலைக்காக மாங்கு மாங்கு என உழைத்து எந்த பலனும் கிடைக்காமல் மன அமைதியும் இல்லாமல் குடும்ப சூழலுக்காகவும், சமூக அழுத்தம் காரணமாகவும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டே பலரும் பணியாற்றி வருவார்கள்.

இப்படியான ஐ.டி. போன்ற லட்சங்களில் உள்ள வேலையை உதறிவிட்டு மனதுக்கு பிடித்த இனிமையான தத்தம் லட்சிய பாதையை நோக்கி பயணித்து வெற்றியையும் சிலர் கண்டிருக்கிறார்கள்.

அதுபோல, கர்நாடகாவின் தட்சின கன்னடா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் தனது சாஃப்ட்வேர் வேலையில் இருந்து விடுபட்டு தன்னுடைய சொந்த ஊரில் பண்ணை வைத்து வாழ்ந்து வருகிறார்.

42 வயதான ஸ்ரீநிவாஸ் கவுடா ஒரு பி.ஏ. பட்டதாரியாவார். 2020ம் ஆண்டு வரை சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றிய இவர், இரா எனும் கிராமத்தில் உள்ள இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஈசிரி ஃபார்ம்ஸ் என்ற பண்ணையை கடந்த ஜூன் 8ம் தேதிதான் தொடங்கியிருக்கிறார்.

இந்த பண்ணையில் ஏற்கெனவே கடக்நாத் வகை கோழிகள், முயல்கள், ஆடுகள் இருந்த போதும் புதிதாக கழுதைகளையும் சேர்த்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ் கவுடா. அதன்படி பண்ணையின் பெரும் பகுதியை கழுதை வளர்ப்புக்கு ஒதுக்கியதோடு, சுமார் 20 கழுதைகளை வாங்கி வளர்த்து, கழுதைப் பால் விற்பனையை முன்னெடுத்திருக்கிறார்.

கழுதைகளின் இருப்பு நாட்டில் குறைந்திருப்பதால் அதன் பாலை விற்பனை செய்ய தொடங்கியவருக்கு வெற்றியே கிடைத்திருக்கிறது. வெறும் 30 மில்லிலிட்டர் கொண்ட கழுதைப் பால் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது.

வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் போன்றவற்றின் மூலம் தன்னுடைய பண்ணையில் இருந்து கழுதைப் பால் வியாபாரம் செய்து வருகிறார் ஸ்ரீநிவாஸ். இதற்கு நல்ல வரவேற்பு கிட்டியதை அடுத்து 17 லட்சம் ரூபாய்க்கும் மேலான ஆர்டர்கள் அவருக்கு வந்து குவிந்திருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள ஸ்ரீநிவாஸ் கவுடா, கழுதைப் பாலை எந்த தயக்கமும் இல்லாமல் குடிக்கலாம். அதில் நல்ல மருத்துவ குணம் உள்ளது. வழக்கம்போல கழுதை வளர்ப்புக்கு எனக்கு ஆதரவு கிடைக்காமல்தான் இருந்தது.

ஆனால் வியாபாரம் சூடுபிடிக்கவே தற்போது சீராகியிருக்கிறது. அதிகம் பேர் இதுப் போன்று பண்ணை தொடங்கவும் ஆலோசனை கேட்டு அணுகுகிறார்கள். அவர்களுக்கும் பயிற்சியும் வழங்குகிறோம்” என நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கூறுகிறார்கள்.