டிரெண்டிங்

‘நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி’ - கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி

‘நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி’ - கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி

rajakannan

கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தடுத்த பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. கர்நாடகாவையும் தாண்டி தற்போது அதன் அரசியல் திருப்பங்கள் மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தலில் யாருக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆளுநர் அழைப்பின் படி எடியூரப்பா முதலமைச்சராகவும் இன்று காலை பொறுப்பேற்றுள்ளார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். 

ஆனால், இதற்கு முன்பாக கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. அதனால், கர்நாடகாவை உதாரணமாக காட்டி காங்கிரஸ் தலைமை புதிய வியூகத்தை அமைத்துள்ளது. காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரவுள்ளதாக கூறப்படுகிறது. கோவா சட்டப்பேரவை தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், 14 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது ஆட்சி செய்து வருகிறது. 

அதேபோல், பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோர ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து செல்ல உள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.