டிரெண்டிங்

கன்னடர்களும், தமிழர்களும் எதிரிகள் அல்ல; சகோதர சகோதரிகளே - முதல்வர் குமாரசாமி

rajakannan

மேகதாது அணை விவகாரத்திற்குப் பேச்சுவாத்தையால் மட்டுமே தீர்வு காணமுடியும் என கர்நாடக‌ மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பரமபதவாசல் வழியாக சாமி தரிசனம் செய்த குமராசாமி, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவது மூலம் நிரந்தரத் தீர்வு காண இயலாது என்றும் இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு எட்டப்படும் எனவும் கூறினார்.

முதலமைச்சர் குமாரசாமி பேசுகையில், “கர்நாடக மக்களும், தமிழக மக்களும் எதிரிகள் அல்ல. இரு மாநில மக்களும் சகோதர சகோதரிகளே. நான் ஏற்கனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளேன். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் நிரந்தர தீர்வை எட்ட இயலாது. இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும். 

எப்போதெல்லாம் சரியான முறையில் மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் தண்ணீரை இருமாநிலங்களும் பகிர்ந்துகொள்ளலாம். இயற்கை பொய்த்து நீர்வரத்து குறைந்து விட்டால் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் சிரமம் ஏற்படும். இரு மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதே எனது கருத்து” என்று கூறினார்.