காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, திமுகவுடன் காங்கிரஸ் வைத்திருக்கும் கூட்டணிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்றுள்ள கராத்தே தியாகராஜன் அங்கு வைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தச் சந்திப்பில், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யுமாறு ப.சிதம்பரத்திடம் கராத்தே தியாகராஜன் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.