இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வாதமே எதிர்க்கப்படும் சூழலில், நடிகர் கமல்ஹாசன் இந்துத் தீவிரவாதம் என கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இடதுசாரிகளுடன் அவர் கூட்டுவைத்து செயல்படுவதாகவும் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள இல.கணேசன், இந்துத் தீவிரவாதம் என கமல்ஹாசன் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான பிரச்னை என தெரிவித்துள்ளார். இது, விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் என கூறியுள்ள அவர், தீவிரவாதத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் எவ்வாறு இணைத்துப் பேச முடியும் என்றும் வினவியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற வாதமே இந்தியாவில் எதிர்க்கப்படும் சூழலில் இந்துத் தீவிரவாதம் என கமல்ஹாசன் குறிப்பிடுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து பாரதிய ஜனதா கட்சி கலக்கமடையவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், கமல் தங்களது போட்டியாளர் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இல்லாத சூழலில் கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளையே பாரதிய ஜனதா எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வகையில், இடதுசாரி கட்சியுடன் கமல்ஹாசன் இணைந்து செயல்படுவதாகவும் இல.கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது நிறம் காவியல்ல என ஏற்கனவே தெரிவித்துள்ள கமல்ஹாசன், இடதுசாரி கட்சியுடன் கூட்டுவைத்து செயல்படுவதன் மூலம் தனது நிறம் சிவப்பு என மக்களுக்கு உணர்த்த நினைப்பதாகவும் விமர்சித்திருக்கிறார். இடதுசாரி ஆட்சி நடைபெற்றுவரும் கேரளாவில் ஏராளமானோர் கொல்லப்பட்டிருப்பது குறித்து பேச கமல்ஹாசனுக்கு துணிச்சல் இல்லை எனவும் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இது இடதுசாரி தீவிரவாதமா அல்லது சிவப்பு தீவிரவாதமா என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் வினவியுள்ளார்.