டிரெண்டிங்

புதிதாக விளம்பரம் தேட வேண்டியதில்லை: கமல்ஹாசன்

புதிதாக விளம்பரம் தேட வேண்டியதில்லை: கமல்ஹாசன்

Rasus

தேவைக்கு அதிகமான விளம்பரம் கிடைத்துள்ளது. எனவே புதிதாக விளம்பரம் தேட வேண்டியதில்லை என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் மக்கள் 48-வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று போரட்டக் களத்துக்கு சென்று மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக மய்யத்தை விட்டு விலகி ஒரு பக்கமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அனைத்திலும் மய்யத்திலே இருக்க முடியாது என்பதால் இப்போது மக்கள் பக்கம் சேர்ந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், “ ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. விரிவாக்கம் செய்யப்படும் இடம் சிப்காட்டில் உள்ளதா..? என ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போது ஆய்வு செய்தால் எந்த உபயோகமும் இல்லை. அதனால் உண்மை நிலையும் தெரியாது. மக்களிடன் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியமாக போய்விட்டதா..? ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புப் பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தேவைக்கு அதிகமான விளம்பரம் கிடைத்துள்ளது. இங்கு அதற்காக வரவில்லை. புதிதாக விளம்பரம் தேட வேண்டியதில்லை” எனவும் தெரிவித்தார்.