டிரெண்டிங்

களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

Rasus

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

எண்ணூர் கழிமுகத்தை உதாசினப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சென்னை அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்று குற்றம்சாட்டிய அவர், இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் பல ஆண்டுகளாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளதாக விமர்சனம்
செய்திருந்தார். மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் முனையங்களை நடு ஆற்றில் கட்டியுள்ளன என்று கூறியிருந்த அவர், நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையை ஏழை மக்களுக்கு கொடுக்காத அரசு நல் ஆற்றைப் புறக்கணிப்பதாகவும் கடுமையாக சாடியிருந்தார்.

தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன், தற்போது முதல்முறையாக எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கமல்ஹாசன் குறைகளை கேட்டறிந்தார். ட்விட்டரில் மட்டுமே கருத்து சொன்னால் போதாது. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூறும் வகையில் முதன்முறையாக களத்தில் இறங்கி மக்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார் கமல்ஹாசன்.