இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.
தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள கமல்ஹாசன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், அரசியல் சாரா அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் நேற்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்தார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நல்லக்கண்ணுவை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார். அப்போது, கமல்ஹாசனுக்கு நல்லக்கண்ணு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதற்காக நல்லக்கண்ணுவை சந்தித்தேன். பயணத்திற்கு உத்தரவு வாங்கி வந்திருக்கிறேன். இடதுசாரிகள் மக்களுக்கு சேவை செய்யும் சாரிகள், அதனால் அதன் தலைவர்களை சந்திக்கிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நான் மதிக்கும் மனிதர்களிடம் ஆசி பெற்று வருகிறேன். இடதுசாரி மட்டுமல்ல அனைத்து தலைவர்களையும் சந்திப்பேன். மதுரையில் 21ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.
இதனையடுத்து, நல்லக்கண்ணு பேசுகையில், “கமல் என்னிடம் ஆலோசனை எதுவும் பெறவில்லை. மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக என்னை அவர் சந்தித்தார். அரசியல் பிரவேசம் குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் வாழ்த்து கூறினேன்” என்றார்.