”மதநல்லிணக்கத்திற்கு எதிரான சூழ்ச்சியை தகர்க்கவே கோவை தெற்கில், தான் போட்டியிடுவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை மரக்கடை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்பகுதியில் பேசிய கமல், ’’மதநல்லிணக்கத்திற்கு எதிராக நடக்கக்கூடிய சூழ்ச்சியை தகர்க்கவே இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தேன். அரசியல்வாதியாக பிறந்த ஊர் கோவை தெற்குதான், கோவை தெற்கின் முகமாக மாறிவருகிறேன்’’ என்று கூறினார்.
தொடர்ந்து கல்வித்தரம் குறித்து பேசிய அவர், ‘’அரசு பள்ளி ஆசிரியர்கள் போன்று தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஊதியம் பெறவேண்டும். இலவசக் கல்வி தருகிறோமோ இல்லையோ, தரமான கல்வியை கொடுக்கவேண்டும்’’ என்று கூறினார்.
முன்னதாக கோவை தெற்குத் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குழி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசன், “ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் எங்கள் பிரச்சனைகளை யாரும் கவனிப்பதில்லை. தாழ்வான பகுதியில் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். கழிவறைகள் இல்லாமல் தான் இவ்வளவு காலம் வாழ்ந்து வருகிறோம் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.
நான் இங்கு வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்களை சந்தித்து உங்களின் தேவைகள் என்ன என்பதை கேட்க வந்திருக்கிறேன். உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை. அதை நினைவுப்படுத்துவதே என் கடமை. உங்களுக்கு அடிப்பை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.