டிரெண்டிங்

கவுதமி சம்பள பாக்கியை கம்பெனி பார்த்துக் கொள்ளும்: கமல் பதில்

கவுதமி சம்பள பாக்கியை கம்பெனி பார்த்துக் கொள்ளும்: கமல் பதில்

rajakannan

கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் கம்பெனியில் அதிகாரிகள் இருக்கிறார் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். ஐஐடியில் சமஸ்கிருத பக்தி பாடல் பாடப்பட்டதால் எழுந்த சர்ச்சையில், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் பாட வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்று அவர் கூறினார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சண்டிகர் நேரு மருத்துவக் கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்தச் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “மாணவர்களுக்குப் பாதுகாப்பின்மை என்பது இருக்கக்கூடாது.
 இங்கு பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் சௌகர்யமாக படித்து செல்கின்றனர். அதே போல பிற மாகாணத்திலும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாகாணத்திலும் பாதுகாப்பு இருக்க வேண்டும் இல்லை என்றால் நாடு நல்ல நாடல்ல” என்றார்.

கவுதமியின் குற்றச்சாட்டு குறித்தக் கேள்விக்கு, ‘கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் கம்பெனியில் அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று பதிலளித்தார். மேலும், விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவன் படுகொலை சம்பவத்தில் அரசு தேவையான நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.