டிரெண்டிங்

“தமாகாவினர் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம்” - கே.எஸ்.அழகிரி

“தமாகாவினர் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம்” - கே.எஸ்.அழகிரி

webteam

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸில் இணைய வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமாகாவை பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர் இந்த அழைப்பு விடுத்துள்ளார். 

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, சோனியாவின் வேண்டுகோளுக்கிணங்க தமாகா எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தமாகாவை பாஜகவுடன் இணைக்க முயற்சி நடைபெறுவதாக ஊடங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ள அழகிரி, காங்கிரஸில் வாழ்க்கையைத் தொடங்கிய தமாகாவினர் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம் எனத் தெரிவித்துள்ளார். 

தமாகா தலைமை பாஜகவில் சேருவது என தவறான முடிவு எடுத்தால், அதை காங்கிரஸ் உணர்வு உள்ள தமாகாவினர் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அழகிரி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றவர்களுக்காக, சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே இருப்பதாகவும், இங்கே வருவதற்கு எவ்வித தயக்கமும் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமாகாவின் வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் சதி செய்வதாகவும் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த போது ஜி.கே.வாசன் கூறினார்.