டிரெண்டிங்

“திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது” - கே.எஸ்.அழகிரி

“திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது” - கே.எஸ்.அழகிரி

webteam

திமுகவுடனான எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது  காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என கேள்வி எழுப்பினார். 

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இது குறித்து கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த கே.என்.நேருவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இந்த பேச்சு குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “திமுக அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என நான் கூறவில்லை. நான் ஒரு திமுககாரர். திமுகதான் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பேன். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்போம் என காங்கிரஸ் கூறியதாக சில செய்திகளில் படித்தேன். அதன் அடிப்படைலேயே இந்த கருத்தை கூறினேன்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திமுகவுடனான எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் கூட்டணி சுமூகமான முறையில் உள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தோடும் மதசார்பற்ற மற்ற கட்சிகளோடும் கூட்டணி சிறப்பாக செயல்படும். மதுரையில் அல்லது திருநெல்வேலியில் வரும் 14 ஆம் தேதி தென் மாவட்டங்களின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்த இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் எப்படி போட்டியிடுவது என மாநாட்டில் முடிவு செய்வோம்” எனத் தெரிவித்தார்.