டிரெண்டிங்

வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Rasus

அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். பல கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அதிமுக விதிகளுக்கு முரணாக  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக மத்திய பாஜகவை, விமர்சித்ததற்காக கே.சி.பழனிசாமி கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் முதல்வரை சந்தித்த அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர், ''கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணைந்துள்ளார் என்று எங்கள் தரப்பில் கூறவில்லை. சில கோரிக்கைகள் தொடர்பாகத்தான் தலைமைச் செயலகத்தில் என்னை அவர் சந்தித்தார்''என்று தெரிவித்திருந்தார்.