மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தாளையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்படி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து அங்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைத்த நிலையில், அவைத் தலைவர் மதுசூதனனுக்கு இருவரும் கார் பரிசளித்தனர்.
மேலும், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 71 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பரஸ்பரம் ஊட்டினர். மேலும் அங்கு திரண்டிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.