மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரனின் 68 சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
சொத்துகள் பறிமுதல் செய்யும் பணியை தொடங்குமாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இப்பணிகள் தொடங்கவுள்ளன. பறிமுதல் செய்யப்பட வேண்டிய நிலங்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அவற்றின் அருகில் அரசுக்கு சொந்தமானது என்ற போர்டு வைக்கப்படும் என தெரிகிறது. இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் அவற்றை அரசு தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அல்லது அவற்றை விற்று அரசு கருவூலத்தில் தொகை செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
லெக்ஸ் பிராப்பர்ட்டி நிறுவனத்தின் சென்னை டிடிகே சாலை அலுவலகம், நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரையிலுள்ள நிலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட உள்ள சொத்துகள் பட்டியலில் உள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் ரிவர்வே அக்ரோ நிறுவனத்தின் ஆயிரத்து 667 ஏக்கர் நிலம் காஞ்சிபுரத்தில் மீடோ அக்ரோஃபார்ம்ஸ் நிறுவனத்தின் 184 ஏக்கர் நிலம், திருவாரூரில் ராம்ராஜ் அக்ரோ மில்சின் 30 ஏக்கர் நிலம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட உள்ளன.