டிரெண்டிங்

"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை" செம்மலை

"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை" செம்மலை

webteam


அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, தனக்கும் கோடநாடு விவகாரத்திற்கு சம்பந்தமில்லை என தெரிவித்தார். அத்துடன் தன் மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவதூறு பரப்ப சிலர் பின்புலத்தில் இருந்து அரசியல் காரணங்களுக்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறினார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனிப்படை அமைத்து விசாரிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை " கோடநாடு விவகாரத்தில் பொய்யை ஜோடிக்க முயற்சி நடக்கிறது. தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது ஒரு திட்டமிட்ட பொய்யான குற்றச்சாட்டு. அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக ஆதாரங்கள் தயாரித்து மிரட்டுவது ஜெயலலிதாவுக்கு தெரியாது. ஆவணங்களை திரட்டி மிரட்டி கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுவது பொய். அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் தலைமைக்கு கட்டுப்பட்டிருந்தோம்" என்றார் அவர். 

இது குறித்து மேலும் பேசிய செம்மலை "சாதிக் பாட்ஷா மரணத்தில் பல மர்மங்கள் நிறைந்துள்ளதாக பேசப்பட்டது கொலையா, தற்கொலையா ? யாரை காப்பாற்ற நடந்தது ? ஒரு பெரிய மனிதரை வழக்கில் இருந்து காப்பாற்ற சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. சாதிக் பாட்ஷா கொலைக்கு பின்னால் 2ஜி வழக்கு நீர்த்துப்போனது” என்றார் அவர்.