டிரெண்டிங்

ஆளும் கட்சியின் குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்

ஆளும் கட்சியின் குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்

rajakannan

ஆளும் கட்சியில் நிலவும் குழப்பமான சூழலை எதிர்க்கட்சி பயன்படுத்தி கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவும் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. தற்போதையை அரசியல் சூழல் குறித்தும், திமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து புதியதலைமுறைக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில்:-

"ஒரு குழப்பத்திற்கு பிறகு திமுக என்ன செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. ஆளுநர் பா.ஜ.க.வின் உறுப்பினராக நடந்துகொள்கிறாரே தவிர, ஆளுநராக, அரசியலமைப்பு சட்டப்படி அமைந்த பொறுப்பில் இருப்பவராக செயல்படவில்லை என்று எங்கள் செயல் தலைவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த சூழலில் இதுகுறித்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தான் முக்கியம். திமுகவை பொறுத்தவரை இந்த பிரச்சனையை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்போம் என்று தான் கவலைப்படுவோமே தவிர, தற்போது திமுகவின் முடிவு எப்படி பாதிக்கும் என்று தெரியவில்லை. இதற்கான தீர்வு திமுகவிடம் இல்லை. இது ஒரு சட்டப் பிரச்சனை. அரசியலமைப்பின் படி இவர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நீக்கப்படிருக்கிறார்கள் என்றால், இவர்கள் கட்சி தாவினார்களா? என்ற கேள்வி எல்லாம் எழுகிறது. 

ஆளும் கட்சியில் குழப்பமான சூழல் ஏற்பட்டால் அதனை எதிர்க்கட்சி பயன்படுத்தி கொள்ளத்தான் செய்யும். பீகாரிலே ஒரு குழப்பம் ஏற்பட்ட போது அங்கு எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. அதனை பயன்படுத்திக் கொண்டது. அதுபோலத் தான் இதுவும். எல்லா மாநிலத்திலும் ஆளும் கட்சியில் உள்ள தவறுகளை எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் தவறுகளை ஆளும் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ளதான் செய்யும். பயன்படுத்திக் கொள்வதை தவறு என்றோ பாவம் என்றோ சொல்ல முடியாது. ஆளும் கட்சிக்கு எதிரான சூழலை எதிர்க்கட்சி பயன்படுத்தி கொள்வதில் என்ன தவறு உள்ளது. திமுகவில் எந்த முடிவும் யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி அவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னே முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்று கூறினார்.