டிரெண்டிங்

கொரோனாவால் இறந்தவர்களை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய தன்னார்வலர்கள்!

கொரோனாவால் இறந்தவர்களை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய தன்னார்வலர்கள்!

JustinDurai

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த மூவரின் உடல்களை அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்துள்ளனர் இஸ்லாமிய தன்னார்வலர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சடலங்கள், சுகாதாரத்துறையின் வழி காட்டுதலின் பேரில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் எரிவூட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் உயிரிழக்கும் தங்களது உறவினர்களின் சடலங்களை தங்களது மத சடங்குகளை பின்பற்றி சொந்த இடங்களில் நல்லடக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தக்கலையை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்த 50-வயது நபர், அருமனை பகுதியை சேர்ந்த 55-வயது நபர், தேங்காய்பட்டணத்தை சேர்ந்த 72-வயது நபர் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தினர் தங்களின் மத சடங்குகளை பின்பற்றி அவர்களை சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்த மனித நேய மக்கள் கட்சியிடம் உதவி கோரினர். இதனையடுத்து த.மு.மு.க அமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தன்னார்வலர்கள் அவர்களது உடலை ஆம்புலன்ஸில் எடுத்து சென்று சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின் பேரில் 12-அடி ஆழம் 10-அடி நீளம் 5-அடி அகலம் கொண்ட குழிகளை தோண்டி அவரவர் மத சடங்குகளின் படி நல்லடக்கம் செய்தனர்.

இதுவரை இவர்கள் ஆறு சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளனர். இதற்காக 20 பேர் இணைந்து மூன்று குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர் இவர்களின் மனித நேயமிக்க செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.