பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் டெலிவரியை தனது யூடியூப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதில், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவதுபோலவும், அதற்காக மருத்துவரே, கத்திரிக்கோலை இர்ஃபானிடம் கொடுப்பது போலவும் இர்ஃபானின் வீடியோ வெளியான நிலையில், அது சர்ச்சையாக மாறியது. மேலும், அறுவை சிகிச்சை நடந்த இடத்தில், கேமராமேனுடன் இர்ஃபானை எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்தது.
இவரின் இத்தகைய செயலால், மருத்துவர் மீது மட்டுமன்றி, மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டி பல மருத்துவர்கள் கூறிவந்த நிலையில், யூடியூபில் வெளியான வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை சார்பில் இர்ஃபானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், இர்ஃபான் தனது சமூக வலைதளப் பக்கத்திலிருந்து அந்த வீடியோவை நீக்கினார். அத்துடன், சென்னை மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இர்ஃபான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்... அதில்,
”எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை; மருத்துவ சட்டங்களை மதிக்கிறேன்” என்று அதில் எழுதியுள்ளார்.