மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில், இன்று மாலை 7.30 மணிக்கு துவங்கிறது. இந்த முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை அணியுடன், ரன்னரான கொல்கத்தா அணி மோத உள்ள நிலையில், இரு அணிகளின் கலவை குறித்துக் காணலாம்.
சென்னை அணி
இதுவரை விளையாடிய அனைத்து சீசன்களிலும் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணியை, இப்போது ரவீந்திர ஜடேஜா வழி நடத்த உள்ளார். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், ராபின் உத்தப்பாவும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன் டவுன் வீரராக அணியில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த டேவ் கான்வே களமிறங்குவார் என தெரிகிறது. மத்திய வரிசையில் ராயுடு, ஜடேஜா, தோனி இவர்களுடன் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஷிவம் தூபேவும் உள்ளார். வழக்கம்போல், ஆல்ரவுடண்டர் பிராவோவும் ஆடுகளத்தை அலங்கரிக்க உள்ளார்.
பந்துவீச்சாளர்களில் முதல் போட்டியில் களமிறங்கும் அனைவரும் சென்னை அணிக்கு புது முகங்களாகவே உள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் ஜோர்டான், நியூசிலாந்தைச் சேர்ந்த ஆடம் மில்னே ஆகியோருடன் உள்நாட்டு வீரரான துஷார் தேஷ் பாண்டேவும் அணியில் உள்ளனர். சென்னை அணியின் மற்றொரு முக்கிய வீரரான மொயின் அலி, கொரோனா விதிகள் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர் முதல் போட்டியில் களமிறங்கவில்லை.
கொல்கத்தா அணி
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா அணியில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் உள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வரிசையில் சீராக ரன்கள் சேர்க்கக் கூடிய நிதிஷ் ராணா, அதிரடியால் அனல் பறக்கச் செய்யும் ஆண்ட்ரே ரஸ்ஸல் உள்ளனர்.
இவர்களுடன் உள்நாட்டு தொடர்களில் உத்வேகத்துடன் விளையாடியுள்ள ஷெல்டன் ஜாக்சன், சுனில் நரைன் ஆகியோர் ரன் குவிப்புக்கு ஏற்ற வீரர்களாக உள்ளனர். நியூசிலாந்தைச் சேர்ந்த டிம் சவுத்தியுடன் உள்நாட்டு வீரர்களான ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.