ஆப்பிள் நிறுவனத்தின் ஐவாட்ச்சின் சில பிரத்யேக அம்சங்களின் மூலம் பலரது உயிரை காப்பாற்றியது குறித்து அறிந்திருப்போம். ஆனால், ஒரு ஐஃபோனால் உக்ரைன் வீரரின் உயிரே காப்பாற்றப்பட்டிருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி 24ம் தேதியில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளையில், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் சேர்ந்து போராடுவோம் என அதிபர் ஜெலன்ஸ்கி அறைகூவல் விடுத்திருந்தார்.
இதனையடுத்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான போராட்டாம் முடிந்தபாடில்லை. அதன்படி, போராடும் வீரர்கள், மக்களின் நிலை குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருகிறது.
இப்படி இருக்கையில், ரஷ்யாவுக்கு எதிரான போராட்டத்தில், ஐஃபோன் ஒன்று உக்ரைன் படை வீரரை இறப்பில் இருந்து காப்பாற்றியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆன்டன் கெராஷ்சென்கோ தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த அவர், வாரியரின் வாழ்க்கையை ஐஃபோன் காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டினோஃபிள் என்ற வீரரின் backpack-ல் வைக்கப்பட்டிருந்த ஐஃபோன் 11 ப்ரோ மொபைலில் துப்பாக்கி குண்டு துளைத்திருக்கிறது. இதனால் அந்த வீரர் தப்பித்திருக்கிறார். குண்டு துளைத்த ஐஃபோனின் வீடியோ பலரையும் ஆச்சர்யப்படவும் பரவசப்படவும் வைத்திருக்கிறது.
இதனையடுத்து, லட்சங்களில் செலவிட்டாலும் உபயோகமானதாகவே இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.