டிரெண்டிங்

செல்லூர் ராஜூ ஆடிய தாண்டியா ! பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி ! - கலகல தேர்தல் பரப்புரை

செல்லூர் ராஜூ ஆடிய தாண்டியா ! பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி ! - கலகல தேர்தல் பரப்புரை

rajakannan

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பரபரபடைந்து விட்டனர். இதற்கிடையே தேர்தல் களத்தில் சில சுவாரஸ்ய, நகைச்சுவை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்ட நிலையில், வழக்கமான பரப்புரை, புகார்கள், குற்றச்சாட்டுகளைக் கடந்து சில சுவராஸ்யங்கள் நடந்துள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். மேடையில் இருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுத் திறமையை புகழ்ந்து பேசிய பிரேமலதா, ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கேட்டால் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் பறந்தோடிவிடும் என கூறி கைதட்டல்களை வசமாக்கினார்.

பின்னர் மேடையேறிய ராஜேந்திர பாலாஜி, ராமனுக்கு சீதை போல், எம்.ஜி.ஆருக்கு ஜானகி போல், விஜயகாந்துக்கு பிரேமலதா மனைவியாக அமைந்திருப்பதாக புகழராம் சூட்டியது தேமுதிக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் எழுச்சி பொங்க பேசிக் கொண்டிருந்த நிலையில், அதிமுக எம்.பி அன்வர் ராஜா தூங்கி வழிந்த சம்பவம் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பொதுக்கூட்டம், பரப்புரை என வேட்பாளர்கள் பிசியாக இருக்க, தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள நூதன வழியை தேர்வு செய்துள்ளார் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன். செல்ஃபி வித் சுவெ என்ற நிகழ்ச்சி மூலம், தம்முடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காகவே நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் அவர்.

நிகழ்ச்சிகள் ஒருபுறமிருக்க, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பன் வாக்குசேகரித்தபோது, நடந்த தேர்தல் விதிமீறல்களும், செய்தியாளர்களின் கேமராவில் சிக்கிக் கொண்டது. காளியப்பன் உதவியாளர் என கூறப்படும் நபர், ஆரத்தி எடுக்க காத்திருந்த ஓவ்வொருவரின் தட்டுகளிலும் 20 ரூபாய் பணம் போட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் வேட்பாளர் டி.ஆர் பாலுவை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய அவர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தம்மை புகழும்போது, மிகுந்த பயமாக இருப்பதாக நகைச்சுவையுடன் கூறியதை ரசிக்கும் விதமாய் அமைந்தது.

இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, மதுரையில் நடந்த நடன நிகழ்ச்சி தான் ஹைலைட். மதுரை காமராஜர் நகரில் தமிழக வாழ் வடமாநிலத்தவர்கள் பகுதிக்குச் சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வாக்குசேகரிப்பின்போது இளைஞர்களுடன் தாண்டியா நடனமாடி மகிழ்ந்தார்.