டிரெண்டிங்

பாலியல் வன்கொடுமை பற்றி பேசினால் கல்லூரியில் இருந்து நீக்குவதா ? கனிமொழி கண்டனம்

webteam

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குறித்து வகுப்பறையில் பேசியதற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு சட்டக்கல்லூரியில் பிரியா என்பவர் முதலாமாண்டு படித்து வந்தார். மேலும், புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 13ம் தேதி வகுப்பறையில் பொதுவான சம்பவங்கள் குறித்து பேசும்படி வகுப்பாசிரியர் கேட்டுகொண்டதாக தெரிகிறது. அதன்படி மாணவி பிரியா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபா குறித்து பேசியுள்ளார். அப்போது அங்குவந்த உதவி பேராசிரியர் அம்மு என்பவர், மாணவியை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உதவி பேராசிரியர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவே, பிரியாவை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மத, அரசியல் மற்றும் பாலியல் ரீதியாக மோதல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இடைநீக்கம் செய்ததாக கல்லூரி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ‌து குறித்து மாணவி பிரியாவிடம் கேட்டபோது, ஆசிரியர் அ‌னுமதியுடனே வகுப்பறையில் பேசியதாகவும், கல்லூரி முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, மாணவர்கள் சமூக விஷயங்களுக்காக குரல் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாணவியின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.