தேர்தல் பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர்களால் கீழே தள்ளிவிடப்பட்டதால் காயமடைந்த மம்தா பானர்ஜி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதற்கு மத்தியில் நந்திகிராம் தொகுதியில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பிருலியா என்ற இடத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, தனது கார் அருகில் மம்தா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர், திறந்த நிலையில் இருந்த காரின் முன்பக்க கதவை தள்ளியதில் அது மம்தாவின் காலில் பலமாக மோதியது.
இதனால் கடும் வலியில் துடித்த மம்தா காரில் ஏற முயன்றபோது, அந்த ஐந்து பேரும் அவரை கீழே தள்ளிவிட்டனர். இதன் காரணமாக அவரது காலில் கடும் வீக்கம் ஏற்பட்டது. அவர்கள் வேண்டுமென்றே தன்னை தள்ளிவிட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, இது திட்டமிட்ட சதி என்று கூறினார். தான் கீழே தள்ளப்படும்போது உள்ளூர் காவலர்களோ அல்லது காவல் கண்காணிப்பாளரோ தனது அருகில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மம்தாவின் இடதுகாலிலும், இடுப்பிலும் காயம் ஏற்பட்டிருப்பதால், எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதலமைச்சருக்கு சிகிச்சையளிக்க 5 பேர் கொண்ட மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவை மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது. மம்தாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, தகவலறிந்த மாநில ஆளுநர் ஜக்தீப் தாங்கர், உடனடியாக மம்தா பானர்ஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் மருத்துவமனைக்குச் சென்று மம்தாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு ஆளுநர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கவலை அடைந்துள்ளனர். அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனை நாட்கள் ஆகும் எனத் தெரியாததால் தேர்தல் பரப்புரையில் பின்னடைவு ஏற்படும் என தலைவர்களும் தொண்டர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.