எந்தவிதமாக கொடுமைகளையும், அநீதிகளையும் இந்திரா காந்தி பொருத்துக் கொள்ளமாட்டார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி அலகாபாத் நகரில் பிறந்தார். இந்திரா காந்தியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை டெல்லியில் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, “மத அடிப்படையில் இந்தியா பிரிவினை அடைவதை எதிர்த்தவர் இந்திரா காந்தி. இந்தியாவில் உள்ள அனைவரும் தாய்நாட்டின் பிள்ளைகள் தான் என்று சொன்னவர். எந்தவிதமாக கொடுமைகளையும், அநீதிகளையும் அவர் பொருத்துக் கொள்ளமாட்டார். அதுதான் அவரது அடிப்படை குணாம்சம். மற்றவர்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடியவர்” என்று கூறினார்.
மேலும், “இந்திரா ஒரு இரும்பு பெண்மணி என எல்லோரும் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் உறுதித்தன்மை என்பது அவரது குணங்களில் ஒன்றுதான். தாராளம், மனிதத்தன்மை ஆகியவை அவரது சிறப்பு வாய்ந்த குணங்கள். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிக அக்கறை கொண்டு அவர்களின் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தினார். தனது தந்தை ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் போதனைகளை உண்மையாக பின்பற்றியவர் இந்திரா” என்று சோனியா காந்தி பாராட்டி பேசினார்.