டிரெண்டிங்

”உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் மோடியும் உள்ளனர்” - எல்.முருகன்

PT WEB

உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் நரேந்திர மோடியும் உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைய பாரதம் சேவா டிரஸ்ட், ஏபிவிபி அமைப்பின் சார்பில் நடைபெறும், பேராசிரியர் பரமசிவன் நினைவு தின நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். அப்போது, ”தேச முன்னேற்றத்திற்கு தேச நலனுக்கு பாடுபட்டவர்கள் தீவிரவாதிகளால் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டனர்.

அவர்களுடைய தியாகத்தால் தான் நாட்டில் ஆன்மிகமும், சேவையும் வளர்ந்து வருகிறது. ஆன்மிகமும், சேவையும் தழைத்தோங்கிய பூமியாக தமிழகம் மாறி வருகிறது. நாடு வளர்ச்சியடைய வேண்டும். நாட்டின் வளர்ச்சி தான் நம் வளர்ச்சி. கடந்த 9 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி20 உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது. உலகத்திற்கு வழிகாட்டியாக உலகத்தை ஆளும் தலைவராக பிரதமர் உள்ளார்.

வளரும் வளர்ந்த நாடுகளுக்கு தலைமையேற்கும் நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. பிரதமரின் செயல்பாட்டால் எந்த நாடு நம்மை அடிமைப் படுத்தினார்களோ அந்த நாடுகளை தாண்டி உலக பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். போர் நடக்கும் சூழலிலும் 23 ஆயிரம் மருத்துவ மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தோம். உலகத்திற்கே இந்தியா வழிகாட்டிக் கொண்டுள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும், முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு பயணித்து கொண்டுள்ளது” என பேசினார்.