டிரெண்டிங்

பொய் பிரசாரத்தால் உண்மைகூட பொய்யாக தோன்றும்: லாலு ட்வீட்

பொய் பிரசாரத்தால் உண்மைகூட பொய்யாக தோன்றும்: லாலு ட்வீட்

webteam

தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், பொய் பிரசாரத்தால் சில வேளைகளில் உண்மைகூட பொய்யாக தோன்றும் என்று பதிவிட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட 15 பேரை கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை விவரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையடுத்து லாலு பிரசாத் உடனடியாக ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். கால்நடை தீவன ஊழல் விவகாரத்தில் லாலு பிரசாத் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் இதுவரை இரண்டு வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

தீர்ப்பு குறித்து லாலு பிரசாத் யாதவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ’பொய் பிரசாரத்தால் சில வேளைகளில் உண்மைகூட பொய்யாக தோன்றும். உண்மையானது காலணியை மாட்டும் நேரத்துக்குள் பொய்யானது உலகின் பாதி தூரத்தை சுற்றி வந்துவிடும்’ என்றும், ’இந்தத் தர்ம யுத்தத்தில் ஒட்டுமொத்த பீகார் மக்களும் தன்னுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நீங்கள் எனக்கு தொல்லை தரலாம், ஆனால், என்னை அழித்துவிட முடியாது’ என்றும் பதிவு செய்துள்ளார்.