டிரெண்டிங்

“படிக்காதவர்கள்தான் போர் வேண்டும் என்பார்கள்” - மெகபூபா காட்டம்

“படிக்காதவர்கள்தான் போர் வேண்டும் என்பார்கள்” - மெகபூபா காட்டம்

rajakannan

தற்போதைய சூழலில் போர் வேண்டுமென்று படிப்பறிவு இல்லாதவர்களால்தான் பேச முடியும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். 

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தாக்குதலை தொடர்ந்து உடனடியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை 200 சதவீதம் இந்தியா உயர்த்தியது. அதோடு, பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, ஆதாரங்களை அளித்தால் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். மேலும், இந்தியா தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

புல்வாமா தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா, “பதான்கோட், மும்பை தாக்குதல்களின் போது பாகிஸ்தானிடம் இந்தியா ஆதாரங்களை கொடுத்தது. அப்போது பாகிஸ்தான் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது இம்ரான்கான் புதிய பிரதமராக வந்துள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான உறவை புதுப்பிப்பது குறித்து அவர் பேசி வருகிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆதாரங்கள் அவரிடம் கொடுத்து, என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.  

அத்தோடு, “இதுபோன்ற நேரத்தில் படிக்காதவர்கள்தான் போர் பற்றி பேச முடியும். இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் போது, போர் பற்றிய கேள்விகள் எதற்காக எழுகின்றன என்று தெரியவில்லை” என்றார்.