உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்திய நோயாளிகள் காக்க வைக்கப்படுவதாக ஒரு அதிர்ச்சிகர தகவல் சமீபத்தில் வெளியானது. தி இந்து வெளியிட்டிருந்த செய்தியில், மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக பெற்று அது தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் இந்திய நோயாளிகள் புறக்கணிப்படுவதாகவும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைப்பெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சையில் 25 சதவீதமும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 33 சதவீதமும் வெளிநாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டவருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு வெளிப்படையாகவே செயல்படுவதாகக் கூறினார். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும், அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனிலேயே நடைபெறுவதால் இதில் 0.1 சதவிகிதம் கூட தவறு நடக்க வாய்ப்பில்லை என கூறினார்.