நண்பன் படத்தில் வரும் விருமாண்டி சந்தானம் (வைரஸ்) போல “Life is a race run run” என சொல்வதற்கு பதிலாக பாரி வேந்தனை போல “வெற்றிக்கு பின்னாடி போகாத, உனக்கு பிடிச்ச துறைய தேர்ந்தெடுத்து அதுல உன் திறமைய வளர்த்துக்கோ. கடுமையா உழைச்சா வெற்றி தானா தேடி வரும்” என சொல்பவர்களைதான் தினசரி ஏதேனும் பிரச்னைகளில் சிக்குவோரை ஆசுவாசப்படுத்தவோ உத்வேகப்படுத்தவோ
செய்தால் போதுமானதாக இருக்கும்.
அப்படியான மோட்டிவேஷ்னல் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், பதிவுகள் பலவும் சமூக வலைதளங்களில் வருவதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவினாஷ் ஷரன் எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்க்கைக்கு தேவையான சில உந்துதல்களை கொடுக்கக் கூடிய பதிவுகளை பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
அதன்படி கடந்த அக்டோபர் 16ம் தேதியும் பாலிவுட்டின் Big B என அழைக்கக் கூடிய அமிதாப் பச்சன் பேசியிருந்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது தந்தை தனக்கு வாழ்க்கை பற்றி கற்பித்த ஒரு பாடம் குறித்து அமிதாப் பச்சன் அந்த வீடியோவில் பேசியிருப்பார்.
அதில், “என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்த ஒரு பாடம் குறித்து எப்போதுமே சொல்வதுண்டு. அது என்னவெனில், ‘நீ நினைத்த விஷயம் அதுபடியே நடந்தால் சரி நல்லதுதான். அதேவேளையில் அது சரியாக நடக்காவிடில் அதுவும் நல்லதுதான்’ என்றார். அவர் கூறியதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அதனால் அவரிடமே சென்று அது எப்படி எல்லாம் நல்லதாக எடுத்துக்கொள்ள முடியும் என கேட்டேன். அதற்கு அவர், ‘நீ நினைத்த சமயத்தில் அது உனக்கு சாதகமாக நடக்கவில்லை என்றால், அது கண்டிப்பாக உனக்கு எப்போதும் கெடுதலை செய்யாது. என்றேனும் ஒரு நாள் அந்த நல்ல ஆற்றல் உனக்கான விருப்பத்தை நிறைவேற்றும்’ எனக் கூறினார்” அமிதாப் கூறியிருப்பார்.
அந்த வீடியோவை கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேலானோர் பார்த்ததோடு, “அமிதாப்பின் இந்த பேச்சு எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடியது” என்ற வகையில் நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.