இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என திவாகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனையும், அவருக்கு பக்கத்துணையாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், எண்ணிலடங்கா தொண்டர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கிலும், உணர்வுகளை காயப்படுத்தும் எண்ணத்திலும் சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனும், ஜெயானந்தும் செயல்படுவது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில், பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் உண்மைக்கு புறம்பாக செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையில் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடகங்களில், கழகத்திற்கு விரோதமாக வெளியிடப்படும் பல சித்தரிக்கப்பட்ட பதிவுகளை பார்த்தவுடனேயே கருத்து தெரிவிப்பதை தவிர்த்து, அச்செய்தியின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதம் செய்ய தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என திவாகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தினகரன் கட்சி தொடங்கியதை தான் ஏற்கவில்லை என தெரிவித்துள்ள திவாகரன், திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவிற்கு வெற்றிவேல், செந்தில் பாலாஜி ஆகியோர் இடையில் வந்தவர்கள் என கூறியுள்ள திவாகரன், தான் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை அவர்கள் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டினார். தினகரன், குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்கியுள்ளதாகவும், கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.