நாத்திகன் என்று என்னை அழைப்பதை நான் ஏற்கவில்லை; பகுத்தறிவாளன் என்பதையே விரும்புகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது 63-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிவருகிறார். இந்த நிலையில், மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்த கமல் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது இந்து தீவிரவாதம் தொடர்பாக கருத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உண்மையாக எதிர் கொள்வேன் என்றும் இந்துத்துவா தொடர்பாக உண்மையை கூறியதற்கு தண்டனை அளித்தால் அதனை அனுபவிக்கவும் தயார் என்றும் கூறினார். மேலும், இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்று கூறிய கமல் எந்த மதமானாலும், எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது எனது உரத்த குரல் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், அவர் பேசுகையில், “நான் பிறந்தது, பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியது தவிர பிராமண சமூதாயத்தை தேடிச் சென்றதில்லை. எல்லா சமுதாயத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். சமூகம் பார்த்து நட்பு கொள்வது கிடையாது. இந்து விரோதி என்று சித்தரிக்கப்படுகிறேன். நான் பிறந்த குலத்தில் இருந்து விலகி வந்தவன் நான். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். நாத்திகன் என்று என்னை அழைப்பதை நான் ஏற்கவில்லை;ஏனென்றால் அந்த வார்த்தை ஆத்திகர்கள் கொடுத்தது. ஆதிகத்தை ஏற்காதவர்களை அவர்கள் நாத்திகர் என்றார்கள். ஆகவே அதை நான் ஏற்க மறுக்கிறேன். நான் பகுத்தறிவாளன். பகுத்தறிய விரும்புகிறவன். பகுத்தறிவாளன் என்று அழைப்பதையே நான் விரும்புகிறேன்” என்றார்.