டிரெண்டிங்

“உங்கள் காலில் விழுகிறேன்; ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்” - சரத்குமார் உருக்கம்

“உங்கள் காலில் விழுகிறேன்; ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்” - சரத்குமார் உருக்கம்

kaleelrahman

ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் - உங்கள் காலில் விழுகிறேன் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கதிரவனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விஞ்ஞான வளர்ச்சி நாட்டுக்கு தேவை, எங்கள் கூட்டணி மக்களின் முதல் கூட்டணி, ஒத்த கருத்துடைய நாங்கள் இணைந்தால் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்க முடியும் என்று கருதினோம்.

மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. புதிய முயற்சிக்கு மக்கள் வாய்ப்பு தர வேண்டும், பணம் கொடுப்பவர்கள் தான் ஆட்சி, அரசியலுக்கு வர முடியும் என்றால் அது ஜனநாயகம் இல்லை. தொலை நோக்குடன் திட்டங்களை வைத்துள்ளோம். ஒரு வாய்ப்பு கொடுங்கள். கூட்டத்திற்கு குவாட்டர், பிரியாணி தர மாட்டோம். 2 பேர் இருந்தாலும் தேர்தல் பரப்புரை செய்வேன். திறமை இருந்த காரணத்தால் தான் கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியே தெரிந்தார்.

அதே போன்று தான் எங்களிடம் திறமை உள்ளது. வாய்ப்பு கொடுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தயவு செய்து வாங்க வேண்டாம் - காலில் விழுந்து கேட்கிறேன். உங்களிடம் பணம் கொடுத்து விட்டு வேறு வழியில் வாங்கி விடுவோம் என்று அமைச்சர் கூறியுள்ளதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓட்டுக்கு கொடுக்கும் காசு பிச்சைக்காசு, அது திருட்டு காசு தயவு செய்து வாங்க வேண்டாம் என்றார்.