டிரெண்டிங்

'எப்படியாவது ஜெயிச்சிடனும்' - வலுவான கொல்கத்தாவை எப்படி சமாளிக்கப் போகிறது ஆர்சிபி?

'எப்படியாவது ஜெயிச்சிடனும்' - வலுவான கொல்கத்தாவை எப்படி சமாளிக்கப் போகிறது ஆர்சிபி?

webteam

இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னைக்கு எதிரான வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் கொல்கத்தா அணியும், பஞ்சாப்பிடம் பட்ட அடியிலிருந்து மீளும் நம்பிக்கையில் பெங்களூரூ அணியும் மோதவுள்ளன

இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அந்த அணி வலுவான சென்னை அணியை எளிதாக வீழ்த்தியிருந்தது. ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் கேப்டன்சி பல்வேறு தரப்பிலும் பாராட்டை அள்ளியது. ஆனால் டெத்-பவுலிங் அணிக்கு கவலை அளிக்கும் பகுதியாக இருக்கிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி மூன்று ஓவர்களில் 47 ரன்களை விட்டுக்கொடுத்தது கொல்கத்தா அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இன்று சந்திக்கும் போது அதே தவறுகளைச் செய்யாமல் கொல்கத்தா அணி கவனமாக இருக்க வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களை பற்றி மட்டும் பேச முடியாது.

பவுன்ஸ், கேரி மற்றும் மூவ்மென்ட் வழங்கும் மும்பை மைதான விக்கெட்டுகள், பவர்பிளே ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். சென்னைக்கு எதிராக உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். "உமேஷ் ஒரு விக்கெட்-டேக்கர். பவர்பிளேயில் அவரது புள்ளிவிவரங்கள் மிகவும் நன்றாக உள்ளன, அங்குதான் நாங்கள் அவரைப் பயன்படுத்த முயற்சிப்போம், ”என்று தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தொடக்கப் போட்டிக்குப் கூறினார். அவ்வாறு உமேஷ் தனது இதே பார்மை தொடரும் பட்சத்தில், ஆர்சிபி அணியின் பேட்டிங்கை நிலைகுலையச் செய்யலாம். ஷிவம் மாவி இறுதியில் அதிக ரன்களை வழங்கிய போதிலும், தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறுகிய நேரான எல்லைகளைக் கொண்ட நவி மும்பை மைதானத்தில் டு பிளெசிஸ் மற்றும் கோஹ்லி போன்றவர்களைக் கட்டுப்படுத்த ஷிவம் மாவி உதவுவார்.

மறுபுறம், பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 205 ரன்கள் எடுத்திருந்த போதிலும், மோசமான பந்துவீச்சால் தோல்வியை தழுவியது. அதிரடி வீரர் மேக்ஸ்வெல் இன்னும் அணிக்கு திரும்பாதது ஆர்சிபிக்கு பெரும் இழப்பே! ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அந்த அணியின் பவுலர்கள் முகமது சிராஜ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் விரைவில் விக்கெட்டுகளை எடுக்கும் தங்கள் பழைய பார்ம்க்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் ஆர்சிபி கொல்க்த்தாவிடம் சரணடையும் ஆபத்து ஏற்பட்டுவிடும். ஆனால் கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது ஆர்சிபி பேட்டர்களுக்கு சவாலாகவே அமையும். “விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் வேகத்தை வழங்கும் திறன் கொண்டவர்கள்” என்று ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறியுள்ளார். இருவரும் ரன் சேர்த்து இவர்களுடன் டுபிளசிஸ் பொறுப்புணர்ந்து ஆடினால் ஆர்சிபி அணியின் பேட்டிங் பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஆனால் பவுலிங்கில் இன்னும் ஹர்ஷல் படேல், ஹசல்வுட் என பலரும் தங்கள் பங்குக்கு சரியாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

டாஸ் வென்ற அணி சேஸிங் செய்வதன் நன்மையை அனுபவிக்கும். இது பனி முக்கிய காரணியாக எப்போதும் இருந்து வருகிறது. இதேபோல், இரு அணிகளும் வலுவான வரிசையைக் கொண்டிருப்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிப்பதை இலக்காகக் கொண்டிருக்கும். கொல்கத்தா அணியில் ஆரோன் ஃபின்ச் இல்லாத நிலையில் அஜிங்க்யா ரஹானேவுடன் ஓபன் செய்ய முடிவு எடுத்தது முதல் போட்டியில் சாதகமாக அமைந்தது. அவர் நிலைமைகளை நன்கு அறிந்தவர் மற்றும் 34 பந்துகளில் 44 ரன்களை எடுத்தபோது அணியின் நம்பிக்கையை அவர் பெற்றார். CSK க்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் 11 உடன் கொல்கத்தா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபிக்கு எதிராக ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் முறையே 215.12 மற்றும் 196.43 ஸ்டிரைக் எடுத்திருப்பது கொல்கத்தாவின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். பவுலிங்கில் பெரும் ஓட்டையுடன் பயணிக்கும் “ஆர்சிபி கப்பல்”, அனைத்திலும் சற்று வலுவாக இருக்கும் “பனிப்பாறை கொல்கத்தா” மீது மோதப் போகிறது. அடுத்து என்ன நடக்கும்? இன்று 7.30 மணிக்கு துவங்கும் போட்டியில் தெரிந்துவிடும்.

-ச.முத்துகிருஷ்ணன்