டிரெண்டிங்

ஜெ.வுக்கு ஆதரவாக இருந்தவர் கமல்: சு.சுவாமி தாக்கு!

ஜெ.வுக்கு ஆதரவாக இருந்தவர் கமல்: சு.சுவாமி தாக்கு!

webteam

ஊழலுக்கு எதிராக தான் போராடிக் கொண்டிருந்தபோது, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தவர் கமல்ஹாசன் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கமல் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது. வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக அகில இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.,பாஜகவின் மூத்த தலைவர் வினய்கட்டியார், இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். கமல்ஹாசனுக்கு மனநிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கூறினார். இப்படி பேசுவதற்கு கமல்ஹாசனிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவதூறு பரப்பும் அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதோடு கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு தொடர்வது குறித்து தமிழக பாஜக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியலில் கால் பதிக்க காத்திருக்கும் கமல்ஹாசன், முஸ்லிம் வாக்குவங்கியை குறிவைத்து இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்று பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஜி.எல்.வி. நரசிம்மராவ் கூறியுள்ளார். கமல் கருத்து ப.சிதம்பரம் மற்றும் சுஷில்குமார் ஷிண்டேவின் குரலாக இருக்கிறது. இவர்கள், சோனியா மற்றும் ராகுல் காந்தியின் அறிவுருத்தலின் படி, இந்து மதத்தை அவமதிக்கிற வேலையை செய்தார்கள். அதே குரலில் இப்போது கமல்ஹாசன் பேசுகிறார். இது கண்டிப்பாக முஸ்லிம் வாக்குவங்கியை குறிவைத்து செய்யப்படும் பிரச்சாரமே என்றும் நரசிம்மராவ் கூறினார்.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறும்போது, “கமல்ஹாசனால் தற்போது ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. நான் ஊழலுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு கமல் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருந்தார். அவரை இடதுசாரிகள் பயன்படுத்துகிறார்கள். இந்த அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எங்கேயும் பயன்படாது என்று சுவாமி கூறியுள்ளார்.

வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளில், முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில மாதங்களில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதேபோல், கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்ததோடு, தனது நிறம் கண்டிப்பாக காவி இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.