டிரெண்டிங்

ஆதார் விவரங்கள் கசிந்தது எப்படி? - விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆதார் விவரங்கள் கசிந்தது எப்படி? - விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

webteam

புதுச்சேரியில் ஆதார் விவரங்கள் திருடப்பட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்ட புகாரில் 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு முன்னரே உரிய முன் அனுமதி பெற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி ஒருவர் பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்புவது குறித்து, புதுச்சேரி சைபர் கிரைம் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதிப்பெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு பாஜக-விற்கு மார்ச் 7ல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், இதுவரை பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினர். பல்க் எஸ்.எம்.எஸ். அனுமதிகோரி பாஜக விண்ணப்பிக்கவில்லை, விசாரணை நேர்மையாக சென்றுகொண்டிருக்கிறது, விசாரணை நடைபெறும் நிலையில், தேர்தலை தள்ளிவைக்கும் பேச்சு தேவையற்றது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணைய அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்பியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை என ஆதார் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்தது. அதேபோல் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலேயே வாக்களர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆதார் ஆணையத்திடம் இருந்து எந்த தகவல்களும் பெறவில்லை எனவும் புதுச்சேரி பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இன்று பாஜக மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்திருந்தார். இதையடுத்து பாஜகவுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடரலாம் எனவும் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை நேர்மையாக செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரியில் ஆதார் விவரங்கள் திருடப்பட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்ட புகாரில் 6 வாரத்தில் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட எண்களுக்கு மட்டும் எஸ்.எம்.எஸ் வந்துள்ளது எனவும் ஆதார் விவரங்கள் கசிந்தது எப்படி என விசாரணை நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.