ராமர் பிள்ளை கூகுள்
டிரெண்டிங்

”இது புகையில்லாமல் எரியும்; இந்த கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பணம்”- ராமர் பிள்ளை பேட்டி

ராமர் பிள்ளை தயார் செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல, வேதி பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்படது எனக் கூறி கடந்த 2000-ம் ஆண்டு சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது .

Jayashree A

ராமர் பிள்ளை இவரை நினைவிருக்கலாம். 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தேன் என்று கூறி முறையான அனுமதி பெற்று, ஆலை தொடங்கி, மூலிகை பெட்ரோல் தயாரித்து ஒவ்வொரு லிட்டருக்கும் அரசுக்கு வரி செலுத்தி பெட்ரோல் விற்பனை செய்து வந்தார்.

ஆனால் ராமர் பிள்ளை தயார் செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல, வேதி பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்படது எனக் கூறி கடந்த 2000-ம் ஆண்டு சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது .

இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராமர் பிள்ளை தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ராமர் பிள்ளையை விடுதலை செய்தது.

இந்நிலையில் மூலிகை பெட்ரோல் தயாரித்ததாக மிகவும் பிரபலம் அடைந்த ராமர் பிள்ளை தற்பொழுது இரண்டு வெவ்வேறு திரவங்களைக்கொண்டு புகையில்லா எரிபொருளை கண்டுபிடித்ததாக இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளார்.

இவர் பத்திரிக்கையாளரிடம் பேசியதாவது,

”என்னிடம் எரியாத இரண்டு வெவ்வேறு திரவங்கள் இருக்கிறது. இதை தனித்தனியாக எரியவைத்தால் எரியாது. அதே சமயம் இதை ஒன்றாக கலந்து எரியவைத்தால் புகையில்லாமல் எரியும் “ என்று சொன்னவர் நிரூபர்களுக்கு முன்பாகவே இரு திரவத்தை ஒன்று சேர்த்து எரிய வைத்து காட்டினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை “எனக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே ஆறு வருட நட்பு உள்ளது. இந்திய ராணுவவீரர்களின் உயர் அதிகாரிகள் என்னுடன் தொடர்பு கொண்டு, இனியும் தாமதிக்காமல், உங்கள் கண்டுபிடிப்புக்கான உற்பத்தியை தொடங்குங்கள், உங்களுக்கு பக்கபலமாக இந்திய ராணுவம் இருக்கும் என்று இந்தியராணுவத்தின் உயர் அதிகாரிகள் கூறினர்” என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ”என்னுடைய சில சோதனையில் திருப்தியடைந்த இந்திய ராணுவத்தினருக்காக 50 லட்ச ரூபாய் செலவில் தினமும் 5000 லிட்டர் மூலிகை எரிபொருள் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரந்தை நிறுவியிருக்கிறோம். அந்த இயந்திரத்தை விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் சோதனை செய்தார்கள். அது அவர்களுக்கு திருப்தி அளிக்கவே அதன் அடுத்த கட்டமாக இதற்கான லைசென்ஸ் வாங்குவதற்கான செயல்பாடுகளும் முடிந்த நிலையில், இப்பொழுது மூலிகை எரிப்பொருள் தயாரிக்க இருக்கின்றோம்.

வருகின்ற மார்ச் 2,3 தேதிகளில் எங்கள் டீம் அங்கு சென்று 5000 லிட்டர் எரிபொருள் தயாரிப்பை செய்வார்கள். அதை லைவ் டெலிகாஸ்ட் பண்ண கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல் சென்னையிலும் ஒரு லைவ் டெமோ நடக்கும். என்னுடைய இந்த கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்திற்கு சமர்பணம்.

என்று கூறி உரையை முடித்துக்கொண்டார்