என்னதான் டெக்னாலஜியை பயன்படுத்தி சாட்டிங், டேட்டிங், மீட்டிங் என காதலித்தாலும், நேரில் பார்த்து, பரஸ்பரம் பேசி, சிலாகித்து, சண்டையிட்டு, கொஞ்சி, அளவளாவி காதலிப்பதே ஒரு அலாதியான உணர்வாகவே இருக்கும்.
அதுவும் சாலையில் நடக்கும் போது தன்னுடைய துணையின் கையை பற்றிக்கொண்டும், கூட்டத்தில் இருக்கும் போது பற்றி அணைத்துக் கொள்ளுதல் போன்ற எதுவும் டிஜிட்டல் வழி காதலில் கிடைத்திடாது என்பது திண்ணமே.
அதனை மெய்ப்பிக்கும் வகையிலான வீடியோ க்ளிப் ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. அந்த வீடியோவில் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தனது ஆணின் மடியில் தலையை வைத்து தூங்க, அவரது தூக்கம் கலைந்து விடாதபடி முகத்தை போர்த்தியும், அவரை தட்டிக் கொடுக்கும் அந்த நபரின் செயலுமே இடம்பெற்றிருக்கிறது.
இதனை பகிர்ந்த ட்விட்டர் பயனர், “வாழ்க்கை எனும் பயணத்தில் உண்மையான துணை எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்” என இந்தியில் கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட ஏராளமான நெட்டிசன்கள், அதனை ஆதரித்து, “இதுதான் உண்மையான காதல்” , “நிபந்தனையற்ற அன்புக்கு இதுவே சாட்சி” , “இதயம் கணிந்த காட்சியாக இருக்கிறது” என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள். இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேலானோர் இந்த வீடியோவை கண்டிருக்கிறார்கள்.