கிச்சன் ஹேக்கிங் என இன்டெர்நெட்டில் தேடினாலே பல ஐடியாக்கள் நிறைந்த வீடியோக்களை கண்டிருப்போம். இதுபோக காய்கறிகளை சுலபமாகவும், சீக்கிரமாகவும் வெட்டுவதற்கென தனியாக ரக ரகமான வெஜிடெபிள் கட்டர்ஸ் பல இ-காமர்ஸ் தளத்திலும் கிடைக்கின்றன.
ஆனால் சமையல் வேலைக்கான முக்கியமான ஹேக்களில் ஒன்று தேங்காயை உடைப்பதுதான். ஆனால் தேங்காயை உடைக்க இடத்தை மிச்சப்படுத்தும் அளவுக்கான எந்த பொருளும் இருந்திருக்காது. பெரும்பாலும் துருவல் போன்று கருவிதான் கிடைக்கப்பெறும்.
இப்படி இருக்கையில், எந்த கஷ்டமும் இல்லாமல், கை வலிக்காமல் மிகவும் எளிதாக தேங்காயை உடைப்பது எப்படி என்ற லைஃப் ஹேக்கிங்தான் இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டு பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.
இந்த டெக்னிக் எல்லார் வீட்டிலும் உபயோகப்படுத்த முடியாவிட்டாலும் லிஃப்ட் இருக்கும் குடியிருப்புகளில் உள்ளவர்கள் இந்த ஹேக்கிங்கை பயன்படுத்த முடியும். அது என்ன லிஃப்ட் இருக்க வீடுகளுக்கு மட்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் தேங்காயை உடைக்க முக்கியமான கருவியாக இருப்பதே லிஃப்ட்தான் என அந்த வீடியோவை பார்த்தே தெரிந்துகொள்ள முடியும்.
அதில், முழு தேங்காயை ஒரு பிளாஸ்டிக் கவரில் கட்டி லிஃப்டின் நுழைவில் கவரின் ஒரு முனையை உட்புறவும், தேங்காய் இருக்கும் பகுதியை வெளிப்புறமும் வைத்து லிஃப்டை இயக்க, லிஃப்ட் மேலே செல்லும் போது தேங்காய் கவரும் மேலே சென்று நொடியில் இரண்டாக உடைந்து விழுகிறது.
அதன்படி, Sidfrompune என்ற இன்ஸ்டா பக்கத்தில்தான் “இந்த டெக்னாலஜி வெளியே கசிய விட்டுவிடக் கூடாது” என கிண்டலாக கேப்ஷன் போட்டு அந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. இதனை இதுவரை 4.2 மில்லியன் அதாவது 40 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்திருக்கிறார்கள்.
நல்ல ஈசியான டெக்னிக்காக இருந்தாலும், பல நெட்டிசன்கள் இந்த ஹேக்கிங் வீடியோவுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். அதன்படி, “இதை பார்த்தால் உண்மையான ஹேக்கிங் மாதிரியே இருக்கவில்லை” என்றும், “மிஷின்களோடு விளையாட வேண்டாம். அப்படி செய்தால் அவை நம்மோடு விளையாடிவிடும்” என்றும் கமென்ட் செக்ஷனில் விமர்சனங்கள் பறந்திருக்கின்றன.