டிரெண்டிங்

ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே தீக்குளிப்பு சம்பவங்களுக்கு காரணம்: ஹெச்.ராஜா

ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே தீக்குளிப்பு சம்பவங்களுக்கு காரணம்: ஹெச்.ராஜா

webteam

தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததே தீக்குளிப்பு சம்பவங்களுக்கு காரணம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பகுத்தறிவு எனும் பெயரில், பெரியாரின் ஆதரவாளர்கள் தமிழகத்தை சீர்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஷால் வீட்டில் வருமானம் குறித்த சோதனை நடத்தப்பட்டது, அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புகளின் கடமை ஆகும். இதில் உள்நோக்கம் கிடையாது என்று தெரிவித்தார். அத்துடன் உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், வரி கட்டவில்லை என்றால் அதனை சந்திக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நெல்லையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் ஆன்மிக நம்பிக்கை குறைந்ததால் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும், பகுத்தறிவு என்று கூறி அடிப்படை அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பகுத்தறிவு என்று கூறி ஈ.வெ.ரா ஆள்கள் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்பதற்கு தீக்குளிப்பு சம்பவம் எடுத்துக்காட்டு என்றார். நாத்திகத்தை அடியோடு விரட்டி அடித்தால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் குறையும், தமிழகத்தில் மட்டும்தான் இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன என்று எடுத்துரைத்தார். மேலும் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தீக்குளித்தார்களா என்ற அவர், திராவிடக் கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்துக்கு விடியல் என்று கூறினார்.