டிரெண்டிங்

குஜராத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

குஜராத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

rajakannan

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் பட்டிதார் சமுதாயத்தை சேர்ந்த 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக தனது இரண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகும் காங்கிரஸ் முதல் பட்டியலையே வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

பாஜக தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மறுநாள் காங்கிரஸ் தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக இதுவரை 106 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜ்கோட்(மேற்கு) தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் பட்டிதார் சமுதாயத்தைச் சேர்ந்த 20 பேர் இடம்பெற்றுள்ளனர். இது ஹர்திக் பட்டேல் தலைமையிலான அமைப்பு உடனான கூட்டணி நெருக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இருப்பினும் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி குறித்து இன்று தனது அறிவிப்பை வெளியிடுகிறார்.