டிரெண்டிங்

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்: தலித் தலைவர் ஜிக்னேஷ்

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்: தலித் தலைவர் ஜிக்னேஷ்

rajakannan

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று முதல் 3 நாட்கள் தெற்கு குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தியை, தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி சந்தித்து பேசவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்தநிலையில், ராகுல்காந்தியை சந்திப்பதாக வெளியான செய்திகளை ஜிக்னேஷ் மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் ராகுல்காந்தியை சந்திக்கப் போவதாக செய்திகள் வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை ராகுல்காந்தி அல்லது அக்கட்சியின் மற்ற தலைவர்களை சந்தித்தால் அது தலித் பிரச்சனைகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளை தெரிந்து கொள்வதற்காகத்தான் இருக்கும். பாஜக தலைவர்கள் என்னை சந்திக்க தயாராக இல்லை. யாரையும் நான் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும்?” என்று தெரிவித்தார். 

குஜராத் தேர்தல் தேதிகள் அறிப்பதற்கு முன்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோலன்கி, பட்டேல் தலைவர் ஹர்திக் பட்டேல், ஓபிசி தலைவர் அல்பேஷ் தகோர் மற்றும் ஜிக்னேஷ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில், அல்பேஷ் தகோர் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார். அப்போது பேசிய அவர் ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்தால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று கூறியிருந்தார்.