நாட்டின் பாதுகாப்பு கருதி விண்வெளியிலும் ஒரு காவலாளியை நிறுத்த தங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை அழிக்கும் ‘மிஷன் சக்தி’ திட்டத்தை சுட்டிக்காட்டி பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜெபூரில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், விண்வெளியில் காவலாளியை நிறுத்தும் தங்கள் சாதனையை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும், “ஏ-சாட் ஏவுகணை சோதனை மூலம் ‘எலைட் விண்வெளி கிளப்’பில் இந்தியா நுழைந்துள்ளது. ஏ-சாட் சோதனையை விமர்சனம் செய்பவர்களுக்கு தேர்தலில் கசப்பான பதிலடி கொடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து தெலங்கானா,ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் பிரதமர் பரப்புரை பொதுக்கூட்டங்களில் பங்கற்று பிரச்சாரம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சந்திர பாபு நாயுடுவை யு டர்ன் பாபு என்று அவர் கூறினார். “வெற்று முழக்கங்களை எழுப்புவர்களை புறக்கணித்து, உறுதியான முடிவுகளை எடுக்கும் அரசாங்கம் அமைய வாக்களியுங்கள்” மோடி பேசினார்.