டிரெண்டிங்

சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்

சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்

rajakannan

நெடுஞ்சாலையில் ராஜஸ்தான் அமைச்சர் சிறுநீர் கழித்த புகைப்படம் வெளியான நிலையில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கலிசரன் சரப் என்பவர்தான் இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜெய்ப்பூர் நகரின் சாலை ஒன்றில் அவர் சிறுநீர் கழிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப்படத்தை வைத்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒருவர்.

இதனையடுத்து அமைச்சர் கலிசரன் தன்னுடைய செய்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும், அஜ்மீர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பியுமான ரகு சர்மா கூறுகையில், “தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றி அரசு பேசுகிறது. ஆனால், அவர்களது சுகாதாரத் துறை அமைச்சர் பொதுவெளியில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கிறார். பாஜக அரசு இதற்காக வெட்கப்பட வேண்டும். வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

ஜெய்ப்பூர் மாநகராட்சியை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதன்மை நகரமாக கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலைகளில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், அமைச்சர் ஒருவரே சாலையில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆனால், ‘இது ஒரு பெரிய விஷயம் அல்ல’ என்று சர்ச்சை குறித்து பேச அமைச்சர் கலிசரன் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வசுந்திரா ராஜு தலைமையிலான பாஜக அரசு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற, ஒரு சட்டமன்ற தொகுதி என 3 இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் பாஜக அரசு மீது இப்படியான விமர்சனங்கள் வருவது சரியானது அல்ல என்று அக்கட்சியினர் கருதுகின்றனர்.